பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் திறப்பு; சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடின


பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் திறப்பு; சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடின
x
தினத்தந்தி 3 Jun 2020 4:15 AM IST (Updated: 3 Jun 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பயணிகள் வராததால் அவை வெறிச்சோடிக் கிடந்தன.

அரியாங்குப்பம்,

ஆட்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுக்க புதுவையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் தடை செய்யப்பட்டன.

இந்தநிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி கடற்கரை, பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் ஆகியவற்றை திறக்க அனுமதி அளித்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இதையடுத்து கடற் கரை சாலை திறந்து விடப்பட்டது. அங்கு ஏராளமானோர் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. ஆனால் அங்கு யாரும் வராததால் அவை வெறிச்சோடி கிடந்தன.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 75 நாட்களாக மூடப்பட்டிருந்த சுண்ணாம்பாறு படகு குழாம் நேற்று திறக்கப்பட்டது. அப்போது சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் செழியன், படகு குழாம் மேலாளர் ராஜசேகர் மற்றும் சீகல்ஸ் உணவக மேலாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் அனைவரும் படகு குழாமிற்கு வந்திருந்தனர்.

படகு குழாமின் நுழைவு வாயில், உள்புற நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை பெண்களால் சுத்தம் செய்யப்பட்டு அங்கு வருவோர் பயன்படுத்துவதற்காக கிருமி நாசினி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. படகுகளை சரி செய்து தயார் நிலையில் வைத்து இருந்ததுடன் அவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கும் எதிர்பார்த்தபடி சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. உள்ளூரை சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர். இதனால் படகு குழாமும் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் செழியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அரசு உத்தரவின்பேரில் சுற்றுலா துறையின் அனுமதியோடு நேற்று சுண்ணாம்பாறு படகு குழாம் திறக்கப்பட்டது. ஊரடங்கால் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதில் இருந்து விடுபட சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைக்கு செல்ல பலரும் விரும்புவார்கள். படகு குழாமிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. அதன்படி கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி கொடுக்கப்படும். கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.

டிக்கெட் வாங்கும் இடத்திலும், படகில் செல்லும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 20 பேர் கொண்ட படகில் 10 பேரும், 40 பேர் கொண்ட படகில் 20 பேரும், 80 நபர்கள் கொண்ட படகில் 40 பேரும் என 50 சதவீதம் சுற்றுலா பயணிகளுடன் படகுகள் இயக்கப்படும். பழைய டிக்கெட் கட்டணமே வசூலிக்கப்படும்’ என்றார்.

Next Story