கூடலூர் அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரி
கூடலூர் அருகே சாலையோர பள்ளத்தில் டேங்கர் லாரி சிக்கியது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாவுக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. மேலும் பஸ்கள், தனியார் வாகனங்களும் செல்கின்றன. அந்த சாலையோரம் ஆபத்தான பள்ளங்கள் காணப்படுகின்றன. அந்த பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு டேங்கர் லாரிகள் சென்றன. அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக லாரிகளை ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் நாடுகாணியில் உள்ள சாலையோரம் டேங்கர் லாரிகளை டிரைவர்கள் நிறுத்தினர். அப்போது ஒரு டேங்கர் லாரி சாலையோர பள்ளத்தில் சிக்கியது. மேலும் லாரி ஒருபுறமாக தூக்கி நின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கீழே சாய்ந்து விழவில்லை.
இதுகுறித்து தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று காலை 11 மணிக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணி நடந்தது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பிறகு லாரி மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story