புதுச்சேரியில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


புதுச்சேரியில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 Jun 2020 4:27 AM IST (Updated: 3 Jun 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி பகுதிக்குள் 5 பஸ்களும், புதுச்சேரி-காரைக்கால் இடையே 4 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அளிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வில் 50 சதவீத பஸ்களை இயக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுவை அரசு பஸ்கள் தமிழக பகுதிக்குள் செல்ல வேண்டும் என்றாலோ, தமிழக அரசு பஸ்கள் புதுவை பகுதிக்கு வர வேண்டும் என்றாலோ இரு மாநில அரசுகளின் அனுமதி பெறுவது அவசியமாகும்.

இதையொட்டி இருமாநில உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவிலேயே பஸ்கள் இயக்கப்படும். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி கடைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பெரிய மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது புதுச்சேரி பகுதிகளில் இயங்கும் பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் கூடுதல் பஸ்களை இயக்க சாலை போக்குவரத்து கழகம் தயங்கி வருகிறது. புதுச்சேரியில் இருந்து கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களுக்கு பஸ்களை ஓட்ட அனுமதித்தால் தான் லாபம் என்பதால் தனியார் பஸ் உரிமையாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழக பகுதிக்குள் பஸ்களை இயக்க அனுமதி கிடைத்ததும் தனியார் பஸ்களை இயக்க தயாராக உள்ளனர். இருமாநில அரசுகளின் உத்தரவுக்காக தனியார் பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பில் உள்ளனர். அதற்கான உத்தரவு எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் புதுவை புதிய பஸ் நிலையத்தை தயார்படுத்தும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அழைத்துச் செல்வதற்காக புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு 2 தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 50 சதவீத பஸ்களை இயக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் புதுவையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பஸ்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story