மக்காச்சோளம், பூ சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.666 கோடி முதல்-மந்திரி எடியூரப்பா வரவு வைத்தார்


மக்காச்சோளம், பூ சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.666 கோடி முதல்-மந்திரி எடியூரப்பா வரவு வைத்தார்
x
தினத்தந்தி 3 Jun 2020 4:31 AM IST (Updated: 3 Jun 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பூ விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.666 கோடியை முதல்-மந்திரி எடியூரப்பா வரவு வைத்தார்.

பெங்களூரு,

விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தோட்டக்கலைத்துறை மந்திரி நாராயணகவுடா உள்பட அந்த துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 15 லட்சம் மக்காச்சோளம், பூ விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் மொத்தம் ரூ.666 கோடியை விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் வரவு வைத்தார்.

அதாவது பூ விவசாயிகளுக்கு எக்டேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதமும், மக்காச்சோளம் விவசாயிகளுக்கு எக்டேருக்கு தலா ரூ.5 ஆயிரமும் என 15 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

“கர்நாடகத்தில் மொத்தம் 550 ஹாப்காம்ஸ் காய்கறி கடைகள் உள்ளன. இதில் 250 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த ஹாப்காம்ஸ் கடைகளை திறக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் தொடக்கத்திலேயே நல்ல மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதனால் புதிதாக ஆழ்துளை கிணறுகளை தோண்ட அனுமதி வழங்கக்கூடாது. ஒரு மாதத்திற்கு பின்னர் நிலைமையை ஆராய்ந்த பிறகு புதிய ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுக்கலாம்.

கடந்த ஆண்டு அதிகளவில் விதை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல் தற்போதும் விதைகளை வினியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பிரச்சினை காரணமாக விவசாயிகளுக்கு உதவ விவசாய போர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

விளைபொருட்கள் விற்பனை, விவசாய உபகரணங்கள் வினியோகம், விளைபொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் தோட்டக்கலையை சேர்ந்த அதிகாரிகள் அயல்பணி அடிப்படையில் வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் சொந்த துறைகளுக்கு உடனடியாக திரும்ப வேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பேசும்போது, “கர்நாடகத்திற்கு வெட்டுக்கிளிகள் தொல்லை ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை. வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இருக்காது என்றாலும் கூட விவசாயத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் விவசாயிகள் தைரியமாக தங்களின் உழவு பணிகளை மேற்கொள்ளலாம்” என்றார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், விவசாயம், தோட்டக்கலைத்துறை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் கட்டாரியா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story