ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்


ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல   பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்
x
தினத்தந்தி 3 Jun 2020 4:38 AM IST (Updated: 3 Jun 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்து நின்றனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் 6 பணிமனைகளில் இருந்து 160 அரசு பஸ்கள் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பயணம் செய்து வருகின்றனர். 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடியதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மற்ற நேரங்களில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர்.

நீண்ட வரிசை

இந்த நிலையில் நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஊட்டியில் இருந்து கோவை செல்ல பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் உடைமைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் 2, 3 பஸ்களே பஸ் நிலையத்தில் நின்றன. சமூக இடைவெளி விட்டு 31 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதால், மற்றவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதனால் பயணிகள் அரசு பஸ்களுக்காக 1 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தனர். பஸ் வந்த பின்னர் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் பயணிகள் ஏறி கோவை சென்றனர்.

கூடுதல் பஸ்கள்

ஊட்டி-காந்தல் இடையே 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 23 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால், காலையில் கூலி வேலைக்கு செல்கிறவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போகிறவர்கள் பஸ்சுக்காக அரை மணி நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு அரசு பஸ்களில் மக்கள் வர தொடங்கி விட்டனர். இதனால் பயணிகள் வருகையை பொறுத்து கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story