புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு


புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 Jun 2020 5:19 AM IST (Updated: 3 Jun 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மேலும் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மதகடிப்பட்டு, கொம்பாக்கம், திலாசுபேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார் கள். ஜிப்மர் கேண்டீனில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும், காவலாளி ஒருவருக்கும் மற்றும் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கதிர்காமத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இதில் நேற்றைய தினம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் தமிழக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே புதுவையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா கூறுகையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு அவசியம். அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்படும் போது தொற்று பாதிப்பு அதிகம் ஆகிறது. நான்காம் கட்ட ஊரடங்கிற்கு பின் 60 சதவீத பாதிப்பு அதிகரித்து உள்ளது என்றார்.

Next Story