பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம்; கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது


பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம்; கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 3 Jun 2020 7:35 AM IST (Updated: 3 Jun 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தடுப்பு குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது.

இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன், உதவி கலெக்டர்கள் பிரதாப், தேன்மொழி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், கொரோனா சிறப்பு அலுவலர் சீனிவாசராஜ், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்லபாண்டியன், சீனிவாசன், மேகலா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்களின் தேவைப்பட்டியலை சுகாதார பணிகள் இணை இயக்குனர் உடனடியாக தயார் செய்து வழங்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பணிகள் குறித்த திட்ட மதிப்பீட்டினை மின் பொறியாளர் மூலம் பெற்று கொள்முதல் குழு ஒப்புதல் வழங்கவேண்டும். சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி. பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள், முக கவசங்கள், கையுறைகள் மற்றும் சத்தான உணவு வழங்க வேண்டும்.

சோதனைச்சாவடிகளுக்கு தேவையான கிருமிநாசினி மற்றும் தெளிப்பான்களை போதிய அளவில் இருப்பில் வைக்க வேண்டும். போலீசாருக்கு தேவையான முழு பாதுகாப்பு உடைகள், முககவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும். 3 ஆயிரம் தரமான முககவசங்களை தயார் நிலையில் வைப்பதோடு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story