குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; வேளாண்மை உற்பத்தி ஆணையர் பேட்டி


குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; வேளாண்மை உற்பத்தி ஆணையர் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2020 2:55 AM GMT (Updated: 3 Jun 2020 2:55 AM GMT)

குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி ஈச்சம்பட்டி கிராமத்தில் மாவுப்பூச்சி நோய் தாக்குதலால் குச்சிகிழங்கு விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதியில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட கலெக்டர் மெகராஜ், நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் யோகநாயகி, கூடுதல் இயக்குனர் கண்ணன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் மூத்த விவசாயி தன்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட குச்சிகிழங்கு வயலை ககன்தீப்சிங் பேடி பார்வையிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் குச்சிகிழங்கு பாதிப்பு உள்ளது? என்ற நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ககன்தீப்சிங் பேடி, “தமிழகத்தில் ஒரு லட்சம் எக்டேரில் குச்சிகிழங்கு விவசாயம் நடந்து வருகிறது. அதில் 3 ஆயிரம் எக்டேரில் மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிப்பு உள்ளது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் தான் பாதிப்பு அதிகம்” என்றார்.

வெட்டுக்கிளி பாதிப்பு இங்கும் வருமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், “மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், நாக்பூர் போன்ற மாநிலங்களில் தான் பாதிப்பு இருந்து வருகிறது. தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு” என்றார்.

சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி சேர்க்கப்படுமா? என்று கேட்டதற்கு, “இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்” என்றார்.

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தூர்வாரும் பணிகள் நடக்கிறதா? என்று கேட்டனர். அதைக்கேட்ட அவர், “குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட் பொக்லைன் மூலம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கடைகோடி விவசாயிக்கும் தண்ணீர் கிடைக்கவே தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஈச்சம்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கிழங்கு மூலம் தயாரிக்கப்பட்ட 17 வகையான பொருட்களை அனைவரும் பார்வையிட்டனர்.


Next Story