ராஜபாளையம் அருகே அரிசி ஆலை தொழிலாளி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
அரிசி ஆலைக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள அரிசி ஆலையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராமாத்தா, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் அரிசி ஆலைக்கு வேலைக்கு சென்றார். அப்போது நள்ளிரவு சில மர்ம நபர்கள் திடீரென்று அரிசி ஆலைக்கு உள்ளே புகுந்தனர். அவர்களை கண்டதும் கண்ணன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியமாக வெட்டி கொலை செய்தது.
போலீசார் விசாரணை
இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து மோப்ப நாய் அங்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், அரிசி ஆலையில் இருந்து சிறிதுதூரம் ஓடி ஓடையில் நின்றது.
அங்கு சில மதுபாட்டில்கள் கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அது தவிர போலீசார் அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான நிலை நிலவுகிறது.
Related Tags :
Next Story