முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும்; சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி


முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும்; சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2020 3:26 AM GMT (Updated: 3 Jun 2020 3:26 AM GMT)

முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ்(வயது 30). இவர் கடந்த மாதம் முதுகுபகுதியில் கூர்மையான ஆயுதத்தால் (ஸ்குருடிரைவர்) குத்திய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் சங்கர், பிரகதீஸ், குடல் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் ராமமூர்த்தி, பொது அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் கண்ணன், மயக்கவியல் டாக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் அடங்கிய குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி முதுகெலும்பில் குத்தியிருந்த ஆயுதத்தை வெற்றிக்கரமாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செயற்கை சுவாச கருவி, இதய செயலாக்க மானிட்டர், ஆக்சிஜன் மானிட்டர் கருவிகளுடன் புதிதாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு தேவையான பொதுவான ரத்த பரிசோதனைகளுடன் சிறப்பு பரிசோதனைக்காக சி.ஆர்.பி., ஏ.பி.ஜி. உள்ளிட்ட பரிசோதனை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் 198 பேர் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுகிறார்கள். 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் வீட்டில் இருப்பவர்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தீவிரமாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. மாவட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள் என ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் சமூக தொற்றும் பரவவில்லை. கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு நின்றாலே கொரோனா வைரஸ் பிடியிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

Next Story