விழுப்புரம் : காய்கறிகள் கொள்முதலை நிறுத்தி மொத்த வியாபாரிகள் போராட்டம்


விழுப்புரம் : காய்கறிகள் கொள்முதலை நிறுத்தி மொத்த வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2020 9:44 AM IST (Updated: 3 Jun 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி லோடு கொள்முதலை நிறுத்தி மொத்த வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். மீண்டும் பழைய இடத்திலேயே காய்கறி விற்பனை செய்ய அனுமதி வழங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் பாகர்ஷா வீதியில் மொத்த காய்கறி கடைகள் உள்ளன. இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு பெங்களூரு, ஒட்டன்சத்திரம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் லாரிகள் மூலம் 100 டன் அளவில் காய்கறிகள், வெங்காயம் லோடு வரத்து வரும். இங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதிக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக விழுப்புரம் பாகர்ஷா வீதியில் உள்ள மொத்த காய்கறி கடைகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை ஜானகிபுரம் பகுதிக்கு கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதற்கு மொத்த காய்கறி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜானகிபுரம் பகுதியில் திறந்தவெளியாக உள்ள அந்த இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லை. எனவே ஏற்கனவே இருந்த பாகர்ஷா வீதியில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் அல்லது நகராட்சி பள்ளி மைதானத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும், அதுவரை மொத்த காய்கறி கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி கடைகளை அடைப்பது என்று முடிவு செய்தனர்.

இதனால் நேற்று முதல் பெங்களூரு, ஒட்டன்சத்திரம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து விழுப்புரத்திற்கு வர வேண்டிய மொத்த காய்கறிகள், வெங்காயம் லோடு கொள்முதல் நிறுத்தப்பட்டது. காய்கறி கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பிறபகுதிகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அதன் பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

இதற்கிடையே விழுப்புரம் எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள நடைபாதையோர காய்கறி கடைகள், பழக்கடைகள் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்த கடைகள் தற்போது காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் காரணமாக, வியாபாரிகளே தங்களது சொந்த செலவில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் அந்த கூடாரத்தில் காய்கறி கடைகள் செயல்படும். அதேபோல் பழக்கடைகளுக்கும் அங்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே உழவர் சந்தையில் உள்ள கடைகள் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது பழைய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளும் இங்கு வந்து இருப்பதால், உழவர் சந்தையில் இருந்து வந்த விவசாயிகள் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். எனவே இவர்கள் தங்களை உழவர் சந்தையில் வைத்தே காய்கறிகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story