கந்தர்வகோட்டை அருகே சிறுமி கொலையில் திடீர் திருப்பம்: பணத்திற்கு ஆசைப்பட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது


கந்தர்வகோட்டை அருகே சிறுமி கொலையில் திடீர் திருப்பம்: பணத்திற்கு ஆசைப்பட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 10:14 AM IST (Updated: 3 Jun 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே சிறுமி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் பணத்திற்கு ஆசைப்பட்டு மகளை நரபலி கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, 

கந்தர்வகோட்டை அருகே சிறுமி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் பணத்திற்கு ஆசைப்பட்டு மகளை நரபலி கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பெண் மந்திரவாதி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 41). கொத்தனாரான இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள்கள் பவித்ரா (19), பவானி (15), வித்யா (13), மகன் சபரி (7). இதில் பவித்ரா கல்லூரியிலும், பவானி 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 3-வது மகளான வித்யா 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் 18-ந் தேதி காலை அங்குள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க வித்யா சென்றாள். இந்நிலையில் தைல மரக்காட்டில் மயங்கிய நிலையில் அவள் கிடந்தாள். அவளது ஆடை அலங்கோலமாக கிடந்தது. மேலும் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.

கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் அப்பகுதியினர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 19-ந் தேதி அதிகாலை வித்யா பரிதாபமாக இறந்தாள்.

8 தனிப்படை

வித்யாவை பலாத்காரம் செய்யும் முயற்சியில் மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். மேலும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவளது உறவினர்கள் போராட்டமும் நடத்தினர். ஊரடங்கு காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் போக்சோ சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்த வழக்கில் எந்த துப்பும் துலங்காமல் போலீசார் திணறிவந்தனர். 8 தனிப்படையினரும் வெவ்வேறு கோணத்தில் விசாரித்தனர்.

தந்தை கைது

இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக வித்யாவை அவளது தந்தை பன்னீர், நரபலி கொடுத்தது புலன் விசாரணையில் தெரியவந்தது. பணப்பிரச்சினையை தீர்க்க புதுக்கோட்டையை சேர்ந்த மந்திரவாதியான வசந்தியின் பேச்சை கேட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பன்னீரையும், அவருக்கு உடந்தையாக இருந்த உறவினரான வடுதாவயலை சேர்ந்த குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பன்னீருக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மனைவியான வடுதாவயலை சேர்ந்த மூக்காயிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

பணம் செழிக்கும்

குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காக மந்திரவாதியான வசந்தியிடம் பன்னீர் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது “அனைத்து கஷ்டங்களையும் தீர்க்க உனது மகள்களில் ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டும். பணம் செழிக்க கூடிய மந்திர சக்தி கிடைக்கும். புதையல்கள் இருக்கிற இடத்தை அறிந்து கொள்ள முடியும்” என பன்னீரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது மகளை நரபலி கொடுக்க பன்னீர் திட்டமிட்டுள்ளார். சம்பவத்துக்கு முந்தைய நாளில் அந்த பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை பன்னீர் தனது முதல் மனைவிக்கு பிறந்த 3-வது மகளான வித்யாவை, பிடாரி அம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க அனுப்பி வைத்துள்ளார்.

கழுத்தை நெரித்து...

மகளை பின்தொடர்ந்து சென்ற பன்னீர், அவளை தனியாக அழைத்து சென்று கழுத்தை துண்டால் நெரித்துள்ளார். அப்போது திட்டமிட்டபடி மறைந்திருந்த குமார், 2-வது மனைவி மூக்காயி ஆகியோர் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை பிடித்துக்கொண்டு மூச்சு திணற செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தனது மகளை யாரோ பாலியல் தொந்தரவு செய்தது போல அவளது ஆடையை பன்னீர் அலங்கோலப்படுத்தி சென்றிருக்கிறார்.

மகளை நரபலி கொடுத்த பின் உயிர் இல்லை என நினைத்து சென்ற பன்னீர், இதனை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார்.

நரபலியில் வித்தியாசம்

இந்த வழக்கில் தொடர்புடைய மூக்காயி கடந்த 30-ந் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இருப்பினும் இது தொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மந்திரவாதி வசந்திக்கு உதவியாக முருகாயி என்பவர் இருந்துள்ளார். மந்திரவாதி வசந்தி, முருகாயி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம்.

இந்த வழக்கில் நரபலி கொடுப்பது என்பது வித்தியாசமாக உள்ளதை அறிகிறோம். பூஜைக்கு மறுநாள் சம்பந்தப்பட்டவரை வரவழைத்து கழுத்தை நெரித்து நரபலி கொடுத்திருக்கின்றனர். பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சேலை, துண்டு, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூஜை நடந்த இடத்தின் அருகே தான் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாடகமாடினார்

இந்த வழக்கில் தொடர்புடைய குமார், இறந்த மூக்காயியின் உறவினர் ஆவார். அவர் தெம்மாவூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்த பின்பு தான் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. அதனை வைத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட தனிப்படையினருக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெற்ற மகளை திட்டமிட்டு நரபலி கொடுத்த பன்னீர், அந்த சம்பவத்திற்கு பின்னர் எதுவுமே தெரியாதது போல நாடகமாடினார். ஊர் மக்கள் சந்தேகப்படாத வகையில் இருந்துள்ளார். இருப்பினும் மகள் இறந்த துக்கம் பற்றி அதிகம் கவலைப்படாததை போன்று பன்னீர் இருந்துள்ளார். இதனாலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெற்ற மகளை தந்தை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story