முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மரக்காணம் வாலிபர் கைது


முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மரக்காணம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 4:47 AM GMT (Updated: 3 Jun 2020 4:47 AM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 10 மணி அளவில் மர்ம நபர் போனில் பேசினார். அவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும், தலைமை செயலகத்திலும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் விரைந்து சென்று சென்னை தலைமை செயலகத்திலும், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் மிரட்டல் அழைப்பு என்று தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு குப்பம் என்ற பகுதியில் வசிக்கும் புவனேஷ் (வயது 20) என்ற வாலிபர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசியவர் என்று தெரிய வந்தது. இது பற்றி விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். மிரட்டல் விடுத்து பேசிய வாலிபர் புவனேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர் புவனேஷ் ஏற்கனவே புதுச்சேரி முதல்-மந்திரிக்கு இது போல மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story