பெரம்பலூரில் ஒருதலை காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தறுத்து கொலை தம்பதி உள்பட 6 பேர் கைது


பெரம்பலூரில் ஒருதலை காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தறுத்து கொலை தம்பதி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 10:28 AM IST (Updated: 3 Jun 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ஒருதலை காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தறுத்து படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் ஒருதலை காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தறுத்து படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒருதலை காதல்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கபிலன் (வயது 27). ரவுடியான கபிலன் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் சிக்கி சிறை சென்ற கபிலன் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்(48). இவர் சென்டிரிங் வேலையும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குணசேகரன் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். சுப்ரமணியனின் மூத்த மகளை அரவிந்தன் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சுப்ரமணியனின் 2-வது மகளை கபிலன் காதலித்து வருவதாக கூறிவந்துள்ளார். இந்த ஒருதலை காதலை கைவிடுமாறு சுப்ரமணியனின் மருமகன் அரவிந்தன், கபிலனை சந்தித்து எச்சரிக்கை செய்ததுடன் அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு கபிலன் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது துறைமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அருகே சென்ற குணசேகரனுக்கும், கபிலனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக உருவானது. பின்பு கபிலன் குணசேகரனின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கழுத்தை அறுத்து

இதுபற்றி தகவல் அறிந்த குணசேகரன், அரவிந்தன் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் கபிலன் வீட்டிற்கு சென்று கபிலனை அடித்து உதைத்துள்ளனர். பின்பு கபிலனை அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே அழைத்துச்சென்று கத்தியால் கழுத்தை அறுத்து போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த கபிலனை, உடனே ஆட்டோவில் ஏற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில் கபிலன் உயிரிழந்தார்.

6 பேர்

இந்த கொலை தொடர்பாக குணசேகரன், அக்காள் கணவர் அரவிந்தன், தந்தை சுப்ரமணியன், தாய் தனலட்சுமி உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் குணசேகரன், சுப்ரமணியன், தனலட்சுமி மற்றும் இவர்களது உறவினர்களான துறைமங்கலம் வாசுகிதெருவை சேர்ந்த விஜய் (19), கார்த்திக் (19), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

Next Story