பல்பொருள் அங்காடியில் மடிக்கணினி, பணம் திருடிய 2 பேர் கைது
அவினாசியில் பல்பொருள் அங்காடியில் மடிக்கணினி, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மங்கலம் ரோட்டில் வேலா பல்பொருள் அங்காடி உள்ளது. கடந்த 30-ந்தேதி வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி சென்றனர். மீண்டும் நேற்று முன்தினம் காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது, கடையின் சிமெண்ட் சீட் மேற்கூரை உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, ரூ.5 ஆயிரம் ரொக்கம், சூடம் ஒரு டப்பா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று அவினாசி போலீசார் அவினாசி -மங்கலம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியில் தங்கி விசைத்தறி வேலை பார்த்து வரும் சின்னப்பன் மகன் ராஜேந்திரன் (39), பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் சந்தோஷ் (23,) என்பதும் இவர்கள் இருவரும் பல்பொருள் அங்காடியில் திருடியதும் தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன் ஏற்கனவே பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு இரும்புகடையில் திருடியதும் தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மடிக்கணினி மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story