போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு - கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்


போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு - கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்
x
தினத்தந்தி 4 Jun 2020 3:30 AM IST (Updated: 4 Jun 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த ரவுடி, கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு,

பெங்களூரு அம்ருதஹள்ளி அருகே ஒய்சாலா லே-அவுட்டை சேர்ந்தவர் யஷ்வந்த். அதே பகுதியில் வசிப்பவர் முனிகிருஷ்ணா(வயது 27) என்ற கப்பே. இவர் ரவுடி ஆவார். கடந்த 4-ந் தேதி முனிகிருஷ்ணா, மதுவாங்கி கொடுக்கும்படி கேட்டு யஷ்வந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்தார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணா, யஷ்வந்தை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றார். படுகாயம் அடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி முனிகிருஷ்ணாவை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள்.

மேலும் முனிகிருஷ்ணாவை பிடிக்க, அம்ருதஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மிட்டகானஹள்ளியில் உள்ள பாழடைந்த வீட்டில் ரவுடி முனிகிருஷ்ணா பதுங்கி இருப்பது பற்றி இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார்.

போலீஸ்காரர்கள் வருவதை பார்த்ததும் பாழடைந்த வீட்டில் இருந்து முனிகிருஷ்ணா தப்பி ஓடுவதற்கு முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் போலீஸ்காரர் நந்தீசை, ரவுடி முனிகிருஷ்ணாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். இதில், நந்தீசின் கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அருண்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டுவிட்டு முனிகிருஷ்ணாவை சரண் அடைந்து விடும்படி எச்சரித்தார்.

ஆனால் அவர் மறுத்து விட்டதுடன், அங்கிருந்து, தப்பி ஓட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் அருண்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடி முனிகிருஷ்ணாவை நோக்கி ஒரு முறை சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே முனிகிருஷ்ணா சுருண்டு விழுந்தார். பின்னர் முனிகிருஷ்ணாவை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.

உடனடியாக ரவுடி முனிகிருஷ்ணா, போலீஸ்காரர் நந்தீஸ் ஆகியோர் எலகங்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது முனிகிருஷ்ணா மீது அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி உள்பட 5 வழக்குகளும், சிக்கஜாலா, கொடிகேஹள்ளி போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

கைதான ரவுடி முனிகிருஷ்ணா மீது அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story