கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு


கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2020 5:00 AM IST (Updated: 4 Jun 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம் தவிர பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் போக்குவரத்து துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்தது. இந்த நிவாரணத்தை பெற இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரத்து 929 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் வங்கி கணக்கில் நிவாரண தொகையை வரவு வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவும் சூழ்நிலையில் பஸ்களில் பயணிக்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். பஸ்களில் தைரியாக பயணிக்க பொதுமக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பஸ்களை சரியான முறையில் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்த வேண்டும். மராட்டிய மாநிலத்தை தவிர பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும். இது தொடர்பாக அந்தந்த மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தனிமனித விலகலை பின்பற்ற வேண்டி இருப்பதால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் பொதுமக்கள் வழக்கம்போல் பஸ்களில் பயணிக்க தொடங்கினால், நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை உள்ளது. மண்டல போக்குவரத்து துறைக்கு வரி வருவாய் குறைந்துவிட்டது. அடுத்து வரும் நாட்களில் இந்த இழப்பை ஈடுகட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக தலைவர் நந்தீஸ் ரெட்டி, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் அசும் பர்வேஸ், கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத், பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் ஷிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story