தஞ்சையில், பாதிப்பு 100-ஐ தாண்டியது: ஒரே நாளில், ராணுவ வீரர்-கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா


தஞ்சையில், பாதிப்பு 100-ஐ தாண்டியது: ஒரே நாளில், ராணுவ வீரர்-கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Jun 2020 10:30 PM GMT (Updated: 3 Jun 2020 10:30 PM GMT)

தஞ்சையில், பாதிப்பு 100-ஐ தாண்டியது. ஒரே நாளில், ராணுவ வீரர்-கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர், 

தஞ்சையில், பாதிப்பு 100-ஐ தாண்டியது. ஒரே நாளில், ராணுவ வீரர்-கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணுவ வீரர் குடும்பம்

தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி வகாப் நகர் விஜயா நகரை சேர்ந்த 42 வயதான ராணுவ வீரர் குஜராத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் தனது 40 வயது மனைவி, 7 வயது மகனுடன் அங்கு வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து விமானம் மூலம் ராணுவ வீரர் தனது குடும்பத்தினருடன் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.

வெளிமாநிலத்தில் இருந்து வந்ததால் ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். வகாப் நகர் பகுதியை அதிகாரிகள் சீல் வைத்ததுடன் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினியை தெளித்தனர்.

கணவன்-மனைவி

தஞ்சை கீரைக்கார தெருவை சேர்ந்த 67 வயதான முதியவர், அவரது 66 வயதான மனைவி ஆகியோர் சென்னைக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 பேருக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த பேரளம் ஆலத்தூரை சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் சென்னை வடபழனியில் கூலி வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1-ந் தேதி 6 பேரும் காரில் புறப்பட்டு கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள் கோவில் பைபாஸ் சாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

முன்னதாக காரில் வந்த இவர்களுக்கு அணைக்கரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் காரில் வந்த மற்ற 3 பேரும் சுந்தரபெருமாள் கோவிலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதி தடை செய்யப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கர்ப்பிணி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகர் பூக்கொல்லையை சேர்ந்த 22 வயதான கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் சென்னையில் வியாபாரம் செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கடந்த 31-ந் தேதி சென்னையில் இருந்து கார் மூலம் பட்டுக்கோட்டைக்கு வந்தனர். இவர்கள் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரது கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா, தாசில்தார் அருள்பிரகாசம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் பாலமுருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாதுரை, நகராட்சி தூய்மை அலுவலர் அந்தோணி ஸ்டீபன் மற்றும் நகராட்சி தூய்மை ஆய்வாளர்கள், வருவாய்த்துறையினர் பட்டுக்கோட்டை நேரு நகர் பூக்கொல்லை பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.

107 பேர்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 100-ஐ தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 83 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Next Story