ரூ.6½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட தொடங்கியது


ரூ.6½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 4 Jun 2020 4:25 AM IST (Updated: 4 Jun 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

ரூ.6½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட தொடங்கியது.

தஞ்சாவூர்,

ரூ.6½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட தொடங்கியது.

மாநகராட்சி அலுவலகம்

தஞ்சை காந்திஜிசாலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு ரூ.6½ கோடியில் 8 ஆயிரத்து 300 சதுரமீட்டர் பரப்பளவில் 2 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கடந்த மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய கட்டுமான பணிகள் நடைபெற்றதால் மாநகராட்சி அலுவலக பிரிவுகள் கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்திலும், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மண்டபத்திலும் செயல்பட்டு வந்தன. நேற்று முன்தினம் முதல் அனைத்து பிரிவுகளும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட தொடங்கியது.

வரி செலுத்துமிடம்

புதிய தொலைத்தொடர்பு பணிகள் நடைபெறுவதால் வரி செலுத்துமிடம், தகவல் மையம் போன்றவை மட்டும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மண்டபத்தில் செயல்படும். இவைகள் வருகிற 10-ந் தேதி முதல் புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்படும்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் அவசர தேவைக்கு 1.1.2018-க்கு முன் பிறந்தவர்கள், இறந்தவர்களின் சான்றிதழ்களை https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1.1.2018-க்கு பின் பிறந்தவர்கள், இறந்தவர்களின் சான்றிதழ்களை http://gccapp.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வரி மற்றும் வரியில்லாத இனங்களை கல்லுக்குளம் வரி வசூல் மையம், முனிசிபல் காலனி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம். அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை 18004251100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story