கோத்தகிரியில் ரேஷன் கடையை உடைத்து மீண்டும் கரடிகள் அட்டகாசம்


கோத்தகிரியில் ரேஷன் கடையை உடைத்து மீண்டும் கரடிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 4 Jun 2020 4:31 AM IST (Updated: 4 Jun 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ரேஷன் கடையை உடைத்து மீண்டும் கரடிகள் அட்டகாசம் செய்துள்ளன.

கோத்தகிரி,

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் கதவை கடந்த 1-ந் தேதி உடைத்து கரடிகள் உள்ளே புகுந்தன. பின்னர் அங்கிருந்த 40 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்று சேதப்படுத்திவிட்டு சென்றன. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் சேதமடைந்த கடையின் கதவை பலப்படுத்துவதற்காக தகரத்தால் மறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மீண்டும் அதே ரேஷன் கடையின் கதவை உடைத்து கரடிகள் உள்ளே புகுந்தன. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், கரடிகளுக்கு சாப்பிட பொருட்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று கடைக்கு வந்த பணியாளர், ரேஷன் கடையின் கதவு மீண்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மண்டல மேலாளர் ஜோதிபாசு, கோத்தகிரி வனச்சரகர் செல்வகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கடையின் கதவை உடைக்கும் போது கரடிகளின் கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்திருப்பதும், கரடிகளின் முடி கதவில் சிக்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story