ஜூன் மாதத்திற்கான அரிசி வழங்கப்பட்டு வருகிறது அமைச்சர் காமராஜ் பேட்டி


ஜூன் மாதத்திற்கான அரிசி வழங்கப்பட்டு வருகிறது அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2020 5:04 AM IST (Updated: 4 Jun 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் மாதத்திற்கான அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

நன்னிலம், 

ஜூன் மாதத்திற்கான அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் காமராஜ் கிராமம், கிராமமாக சென்று மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார். அதனை தொடர்ந்து தலையூர், பில்லூர், மாங்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெற்றார். அப்போது பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

பேட்டி

பின்னர் மாங்குடியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்ற அமைச்சர் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு ஜூன் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதாவது உள்ளூர் மக்களுக்கு தொற்று ஏதும் இல்லை. தற்போது உள்ள தொற்றுகள் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே.

50 கிலோ அரிசி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி தற்போது ஜூன் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு பேர் கொண்ட ரேஷன் கார்டுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மதுரையில் ரேஷன் கடையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து கேட்டதற்கு, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும்.

இலவச மின்சாரம் வழங்குவதில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பது தான் நோக்கம். இதில் இரண்டாவது கருத்து கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.பி. கோபால், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத், கூட்டுறவு சங்க தலைவர் புகழேந்தி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story