பயணிகளை ஏற்றி செல்வதில் கட்டுப்பாடு: மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வருமானமின்றி ஊழியர்கள் தவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால், வருமானமின்றி ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
கூடலூர்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கட்டுப்பாடுகளில் சில தளர்வு செய்யப்பட்டு, பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் 14 பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால், நீலகிரி மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக ஊட்டி, கூடலூர், குன்னூர் பகுதியில் சுமார் 150 மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வருமானமின்றி மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அதை சார்ந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குறைந்த அளவு பயணிகளுடன் இயக்கினால் நஷ்டம் ஏற்படும் எனக்கூறி மினி பஸ்களை இயக்காமல் உரிமையாளர்களும் கவலை அடைந்து இருக்கின்றனர்.
நஷ்டம்
இதுகுறித்து மினி பஸ் ஊழியர்கள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 69 நாட்களாக மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டாலும், ஒரு பஸ்சில் 14 பேரை மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. குறைந்த பயணிகளுடன், குறைந்த கட்டணத்தில் இயக்குவதால் நஷ்டம்தான் ஏற்படும். இதனால் மினி பஸ்களை இயக்காமல் அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்து உள்ளனர். இதன் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஊரடங்கை முழுமையாக தளர்த்தினால் மட்டுமே கிராமப்புறங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை
மினி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:-
பல லட்சம் ரூபாய் செலவில் மினி பஸ்களை வாங்கி அரசுக்கு முறையாக பெர்மிட் கட்டணம் செலுத்தி தொழில் நடத்தப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கால் பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் குறைந்த அளவு பயணிகளை வைத்து இயக்குவதால் டீசல் செலவுக்கு கூட வசூல் ஆகாது. இதனால் அரசின் மறு அறிவிப்புக்காக காத்திருக்கும் சூழல் காணப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story