கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடு ரூ.64 லட்சத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்
கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதாவது ரூ.64 லட்சம் செலவில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சுற்றுலா தலம்
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இடவசதி இல்லை
அதன்பிறகு கடல் நடுவில் பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றொரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் பார்க்க தவறுவதில்லை.
சூரியன் உதயமாகும் காட்சியை கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் நின்று தான் பார்க்க முடியும். ஆனால் இந்த கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் நின்று சூரியன் உதயமாகும் காட்சியை காண போதுமான இடவசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.
இருக்கைகளுடன்...
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் பகவதி அம்மன் கோவில் அருகே கிழக்கு பகுதியில் ரூ.64 லட்சம் செலவில் இருக்கைகளுடன் காலரி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த காலரி 5 அடுக்கு முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கன்னியாகுமரி பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகளை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல்அலுவலர் சத்தியதாஸ், உதவிசெயற்பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பணி மேற்பார்வையாளர் பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story