தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு லாரிகளில் அணிவகுத்து வந்து மனு அளித்த டிரைவர்கள் கல் குவாரிகளில் முறையான ரசீது கிடைக்கவில்லை என புகார்
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு லாரிகளில் அணி வகுத்து வந்து டிரைவர்கள் மனு அளித்தனர். கல் குவாரிகளில் முறையான ரசீது கிடைக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
தேனி,
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று 20-க்கும் மேற்பட்ட லாரிகள் அணி வகுத்து வந்தன. அவை மணல் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள். அந்த லாரிகளை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து 4 பேர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர்.
புகார் மனு
இதையடுத்து தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சார்பில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கடந்த 2 மாதமாக கொரோனா நோய் தாக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது மீண்டும் லாரிகள் ஓட்டும் நிலையில், கனிமவளமான ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் போன்றவை விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. வாங்கும் கற்கள், எம்-சாண்ட் தொகைக்கு முறையான அனுமதி சீட்டு மற்றும் ரசீது வழங்குவது இல்லை. இதனால், அடிக்கடி வருவாய்த்துறை, போலீஸ் துறையிடம் சிக்கி அபராதம் செலுத்தி வருகிறோம். அத்துடன் 15 நாட்களுக்கு வாகனத்தை வருவாய்த்துறை வசம் நிறுத்தி வைக்கிறோம். இதனால், நாங்கள் சரியான பணம் செலுத்தியும், கல் குவாரிகளில் முறையான அனுமதிச்சீட்டு கிடைக்காமல் பாதிக்கப்படுகிறோம். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளுக்கும் ஒரே விலைப்பட்டியலை நிர்ணயம் செய்து தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
மனு அளித்த டிரைவர்கள் மேலும் கூறுகையில், ஒரு யூனிட் எம்-சாண்ட் மணல் கடந்த 2 மாதத்துக்கு முன்பு ரூ.1,300 முதல் ரூ.1,700 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.4 ஆயிரம் வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் அதற்கு உரிய ரசீது வழங்குவது இல்லை. இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story