நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2020 7:47 AM IST (Updated: 4 Jun 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஞானதிரவியம் எம்.பி.

கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினரால் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்லையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பணகுடியில் நடந்த விழாவுக்கு ஞான திரவியம் எம்.பி. தலைமை தாங்கி, பஸ்நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன் பின்னர் கட்சி கொடியேற்றினார்.

நாங்குநேரி- வள்ளியூர்

நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நாங்குநேரி ஓசானம் அன்பு இல்லம், அரசன் முதியோர் இல்லங்களில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரகாம்பெல் இலவசமாக அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் ஏர்வாடி முதியோர் இல்லம் மற்றும் நாங்குநேரி ஓசானா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதி பரமேஸ்வரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜோசப் சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சேரன்மாதேவி- அம்பை

சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட உதவியாக சுமார் 1500 பேருக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேரன்மாதேவி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் நலத்திட்ட உதவி வழங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை நகர தி.மு.க. சார்பில் பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 50 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. அம்பை தி.மு.க. வக்கீல் அணி சார்பில் அம்பை கோர்ட்டு முன்பு 50 பேருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்லிடைக்குறிச்சியில் நகர செயலாளர் இசக்கிபாண்டியன் தலைமையில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் 100 பேர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இட்டமொழியில் நடந்த விழாவில் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஞானராஜ், நாங்குநேரி ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் சுந்தர், பிரதிநிதி லிங்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

பாவூர்சத்திரம்-செங்கோட்டை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நகர தி.மு.க சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மாலை அணிவித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன் இனிப்பு வழங்கினார்.

செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு பணிமனை தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கி கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் தொழிற்சங்க கொடியினை சிறப்பு விருந்தினர் முத்தையா ஏற்றினார்.

கடையநல்லூர்- புளியங்குடி

கடையநல்லூரில் ஒன்றிய செயலாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில் கடையநல்லூர் சட்டமன்ற அலுவலக கட்டிடம் முன்பு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நகர செயலாளர் சேக் உதுமான் என்ற சேகனா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அச்சன்புதூர் அருகே உள்ள வடகரையில் மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூத் தலைமையில், மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப் முன்னிலையில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி 17 மற்றும் 18-வது வார்டு தி.மு.க சார்பில் 17-வது வார்டு செயலாளர் டிரைவர் கணேசன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புளியங்குடியில் நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பத்திரம் சாகுல் அமீது ஏற்பாட்டில் டி.எஸ்.எம். மனவளர்ச்சி குன்றியோர் அறக்கட்டளைக்கு அரிசி பைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில்- குருவிகுளம்

சங்கரன்கோவில் என்.ஜிஓ காலனி மின்வாரிய அலுவலகம் முன்பு தொமுச பொதுசெயலாளர் சிங்காரம் ரத்தினசபாபதி அறிவுறுத்தலின் படி நடந்த நிகழ்ச்சிக்கு திட்ட பொருளாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் சங்க கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்க பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு தொமுச மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல்நெல்சன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தி.மு.க நிர்வாகிகள் சங்கர், குமார், பிரகாஷ், ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் மெயின் பஜாரில் உள்ள அண்ணா திடலில் கருணாநிதி உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Next Story