நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயம் திடீர் கட்டுப்பாட்டால் பயணிகள் அவதி
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் கட்டுப்பாட்டால் பயணிகள் அவதி அடைந்தனர்.
நெல்லை,
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் கட்டுப்பாட்டால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பஸ், ரெயில், விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி 5-வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதில் பஸ் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் அரசு பஸ் இயக்கப்படும். அதுவும் 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயங்கும் என்று அறிவித்தது.
பஸ்கள் ஓடியது
அதனை தொடர்ந்து 68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் ஓடின. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முதல் நாளில் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று முன்தினம் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து நெல்லை மண்டலத்தில் அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.
நெல்லை புதிய பஸ்நிலையம் மற்றும் நெல்லை பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பயணிகள் முக கவசம் அணிந்து பஸ்சில் ஏறுகிறார்களா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் உள்ள ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் அதிகப்படியான சோதனை இல்லை. பயணிகள் அதிக அளவில் ஏற்றப்படுகிறார்கள்.
திடீர் கட்டுப்பாடு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் நாகர்கோவில் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நாகர்கோவில் செல்லக்கூடிய பயணிகள் அங்கு அதற்காக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியரிடம் தங்களுடைய ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதில் உள்ள எண்கள் மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொண்ட பிறகே அவர்கள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்லும் பஸ்சில் 32 பயணிகள் மட்டுமே ஏற்றி அனுப்பப்படுகிறார்கள். சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகள் அவதி
நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சில் பயணம் செய்ய திடீரென ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டை கட்டாயம் தேவை என்று கூறியதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதற்கு சில பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு கண்டக்டர், அடையாள அட்டை இருந்தால்தான் பஸ்சில் பயணிகளை ஏற்றி வர வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் 350 பஸ்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 220 பஸ்களும் ஆக மொத்தம் நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 570 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1-ந்தேதி ரூ.11 லட்சம் வசூல் ஆனது. 2-ந்தேதி ரூ.28 லட்சம் வசூலாகி உள்ளது. பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று கூறி உள்ளோம்“ என்றார்.
Related Tags :
Next Story