கட்டுப்பாடுகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ ; கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை


கட்டுப்பாடுகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ ; கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2020 8:49 AM IST (Updated: 4 Jun 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொடர்ந்து கட்டுப்பாடுகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. ஒவ்வொரு தளர்வின் போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வணிக நிறுவனங்களில் கைகளை கழுவ தேவையான வசதிகள் அல்லது கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக தமி்ழ்நாடு அரசு வழங்கும் தளர்வுகளை முறையாக பயன்படுத்த வேண்டும். கொரோனா தொற்றின் பாதிப்பு நாமக்கல் மாவட்டத்தில் குறைவாக இருந்தாலும், உலகம் முழுவதும் அதன் பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து கொண்டே உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு அறிவுரை குறித்து பொதுமக்களும், வணிகர்களும் அலட்சியமாக இருப்பது பல்வேறு இடங்களில் காண முடிகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி 2 சக்கர வாகனங்களில் அதிக அளவில் நடமாடுவது வருத்தம் அளிக்கும் செயல் மட்டுமல்லாது, கொரோனா நோய் தொற்றினை மிக எளிதில் அதிகரிக்க வழிவகுக்கும் செயலாகும்.

இதனால் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்த வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, வணிகவரித்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து வட்ட அளவில் மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வுகளை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுகளில் முககவசம் அணியாத நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க வேண்டும்.

இத்தகைய கட்டுப்பாடுகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு முதல் தடவை ரூ.500 அபராதம் விதிக்கவும், மீண்டும் தொடர்ந்து கடைபிடிக்க தவறினால் அந்த நிறுவனம் அல்லது கடையை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். தினந்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் கட்டாயம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ஹசினாபேகம் உள்பட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story