சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலி


சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2020 9:48 AM IST (Updated: 4 Jun 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலியானார்.


கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று சிலரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 118 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது பற்றிய விவரம் வருமாறு:-

சங்கராபுரம் தேவபாண்டலத்தை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவர், சங்கராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்தது.

எனவே டாக்டர்கள், அவரது ரத்த மாதிரி மற்றும் உமிழ்நீர் எடுத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவு கடந்த 24-ந்தேதி வந்தது. இதில் பஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது? என்பது குறித்து அரசு பஸ் டிரைவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். அப்போது அரசு பஸ் டிரைவர், மரவாநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று ஒரு நாள் தங்கியதும், அவர் மூலம் தொற்று ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர் மற்றும் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அரசு பஸ் டிரைவரின் மகனான 23 வயதுடைய வாலிபருக்கும், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அரசு பஸ் டிரைவரின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர், மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவர்தான் கொரோனாவுக்கு முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story