அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற மனநலம் பாதித்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாத நிலை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாததால் அவருக்கு பாதிப்பு ஏற்படுமா என அஞ்சப்படுகிறது.
விருதுநகர்,
சாத்தூர் உப்பத்தூர் பகுதியில் இருந்த 35 வயது கர்ப்பிணி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் சுற்றி திரிந்ததாக கூறப்பட்டது. உப்பத்தூர் சுகாதார நிலைய செவிலியர் இந்த பெண்ணை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் கொண்டு வந்து சேர்த்தார். ஆம்புலன்சில் வரும் போது அந்த பெண் அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரும் தன்னுடன் வந்தால் தான் ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று அடம் பிடித்ததால் அந்த முதியவரும் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வரப்பட்டார்.
அவர் யார்? என்று தெரியாத நிலையில் கர்ப்பிணியும் தனது பெயரை மட்டும் கூறிய நிலையில் வேறு எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிய இந்த பெண் விருதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி சாலையில் நடுரோட்டில் அப்பகுதியில் இருந்த பெண்களின் உதவியுடன் பெண் குழந்தை பெற்று எடுத்தார். பின்னர் குழந்தையுடன் அந்த பெண் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குழந்தையுடன் அந்த பெண் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சோதனை இல்லை
சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சுற்றி திரிந்த இந்த பெண் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் சென்று இருக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட உடன் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அறிகுறி ஏதும் இல்லாத நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் இந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அந்த பெண்ணுக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இதுபற்றி மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இந்த பெண் தங்கி இருக்க வாய்ப்பு உள்ள நிலையில் அறிகுறி இல்லை என்ற காரணத்தை கூறி பரிசோதனை செய்யப்படாததால் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இனியாவது இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் சிகிச்சைக்கு வெளியில் இருந்து வரும் நபர்களை அனுமதிக்கும்போது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story