கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் இருந்து ராமநாதபுரம் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியான சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகை உள்ள சென்னையில் நாள்தோறும் ஆயிரத்தை தாண்டும் அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியில் செல்ல அதிகஅளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஏ.சி. வசதி இல்லாத ரெயில் போக்குவரத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு ரெயில் சென்றுவருகிறது. இ-பாஸ் முறை மூலம் ரெயிலில் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் போக்குவரத்தில் விழுப்புரம்-மதுரை இடையேயான ரெயில் போக்குவரத்து சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னையில் இருந்து விழுப்புரம் வரை கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து அங்கிருந்து இ-பாஸ் முறை மூலம் மதுரை வந்துவிடுகின்றனர். மதுரையில் இருந்து மண்டலங்களுக்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்பதால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்வ சாதாரணமாக வந்துவிடுகின்றனர்.
கோரிக்கை
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2 நாட்களில் ஏராளமானோர் சென்னையில் இருந்து வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக இருக்கும் சென்னையில் இருந்து இந்த புதிய வசதி மூலம் சர்வ சாதாரணமாக பலர் ராமநாதபுரம் வந்த வண்ணம் உள்ளனர். ஊரடங்கு காலத்திற்கு முன்னதாக சென்னையில் இருந்த பலர் தற்போது ராமநாதபுரத்திற்கு ரெயில் மூலம் வந்துள்ளனர்.
இவர்கள் மூலம் ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இ-பாஸ் பெற்று ரெயில் மூலம் வந்திருந்தாலும் அவர்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி கொரோனா இல்லை என்று உறுதி செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவிடம் கேட்டபோது, சென்னையில் இருந்து அவசர காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று ராமநாதபுரம் வருபவர்களின் பட்டியலும், விழுப்புரம் முதல் ரெயில் மூலம் மதுரை வரும் ராமநாதபுரம் மாவட்டத்தினரின் பட்டியலும் மாவட்ட நிர்வாகத்திற்கு வருகிறது. அதன் அடிப்படையில் கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பரிசோதனை
மதுரை வரை வந்து அங்கிருந்து கார்கள் மூலம் மண்டலத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் வரும் வாய்ப்பு உருவாகி உள்ளதால் அவ்வாறு வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்யவும், இவ்வாறு வருபவர்கள் குறித்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயிலில் பயணம் செய்ய உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுதான் அனுமதிக்கப்படுவதால் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் சென்னையில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story