மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்


மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
x
தினத்தந்தி 4 Jun 2020 10:39 AM IST (Updated: 4 Jun 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

கரூர், 

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக சோளத்தட்டைகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பருவமழை

கர்நாடகா மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. தற்போது குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இந்த மாதமும், அடுத்த மாதமும் (ஜூலை) தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோளத்தட்டைகள் அறுவடை

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காக தற்போது கால்நடைகளின் உணவுக்காக பயிர் செய்யப்பட்ட சோளத்தட்டைகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நடப்பு ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்துள்ளது. மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பும் திருப்திகரமாக உள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து சாகுபடிக்காக நிலத்தை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் நெல் சாகுபடிக்காக அவுரி பயிரிட உள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

Next Story