புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நண்பருக்கும் தொற்று கடைவீதியில் நகைக்கடைகள் அடைப்பு


புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நண்பருக்கும் தொற்று கடைவீதியில் நகைக்கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 11:18 AM IST (Updated: 4 Jun 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நண்பருக்கும் தொற்று உறுதியானது. இதனால் கடைவீதியில் நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நண்பருக்கும் தொற்று உறுதியானது. இதனால் கடைவீதியில் நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.

நகைத் தொழிலாளிக்கு தொற்று

புதுக்கோட்டை வடக்கு 5-ம் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நில அளவையர் கொரோனா பாதிப்பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரது 23 வயதுடைய மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்ததால் ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் பலியானவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது மகனுடன் நெருங்கி பழகியவர்கள் என 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டன. இதில், பலியானவர் மகனின் நண்பரான புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் பொற்பனையான் பஜார் சந்தில் 23 வயதுடைய நகைத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தடுப்புகள் அமைப்பு

கொரோனா தொற்று உறுதியானதால் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் நகைக்கடை பஜார் முழுவதும் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கடைகளையும் அடைக்க நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் அந்த வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியான கடைவீதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொருவர் அனுமதி

இதற்கிடையே சென்னை சென்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.குளவாய்ப்பட்டியை சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இதில், 20 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 12 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story