முகூர்த்த தினம் காரணமாக அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு


முகூர்த்த தினம் காரணமாக அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 11:56 AM IST (Updated: 4 Jun 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

ஈரோடு,

தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் சேர்த்து ஒரே மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த மண்டலத்துக்குள் 68 நாட்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதனால் குறைவான எண்ணிக்கையிலான பஸ்களே ஓடின. நேற்று முன்தினம் பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணம் நடந்தது. மேலும், திருமணத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், நெருங்கிய உறவினர்களின் திருமணத்துக்கு பலர் சென்றார்கள். இதனால் வெளியூர் செல்லும் பஸ்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டதால் சில பஸ்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் முந்தியடித்து கொண்டு ஏற முயன்றார்கள். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் அனைத்து இருக்கைகளிலும் உட்கார்ந்து சென்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. மற்ற நேரங்களில் குறைந்த எண்ணிக்கைகளுடன் மட்டுமே பஸ்கள் ஓடின.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமருமாறு கண்டக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இதனால் அவர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்வதற்காக முந்தியடித்து கொண்டு ஏற வேண்டி உள்ளது. அதே சமயம், குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிவதில்லை. எனவே பயணிகள் அதிகமாக செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story