ஊரடங்கை மீறி மீன்பிடித்திருவிழாவில் திரளானோர் பங்கேற்பு வழக்குப்பதிவு செய்ய உத்தரவு


ஊரடங்கை மீறி மீன்பிடித்திருவிழாவில் திரளானோர் பங்கேற்பு வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2020 6:51 AM GMT (Updated: 4 Jun 2020 6:51 AM GMT)

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன ஏரி உள்ளது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன ஏரி உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஏரியின் தண்ணீர் அளவு குறையும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மீன்பிடி திருவிழாவை நடத்துவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால், கடந்த 2 மாதங்களில் மீன்பிடி திருவிழாவை நடத்தவில்லை. 

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டதால் மீன்பிடி திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தர்கள் முடிவுசெய்து, அதன்படி மீன்பிடித் திருவிழாவை நேற்று நடத்தினர். இதில் நக்கம்பாடி, செந்துறை சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த செந்துறை போலீசார் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது இடத்தில் ஒன்று கூடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவே அனைவரும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் ஏரிக்கு மீன் பிடித்து செல்லலாம் என ஆர்வத்துடன் வந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Next Story