மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்


மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2020 10:30 PM GMT (Updated: 4 Jun 2020 8:22 PM GMT)

மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தொல்லியல் துறை தொடங்கி உள்ளது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வரும்போது மேம்பாட்டு பணிகள் செய்தால் அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தற்போது தொல்லியல் துறை நிர்வாகம் இங்குள்ள புராதன சின்னங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக பஞ்ச பாண்டவர் ரதம் என அழைக்கப்படும் ஐந்து ரதத்தில் சகாதேவ ரதம், பீம ரதம், அர்ச்சுன ரதம், நகுலன் ரதம், தர்மராஜ ரதம் உள்ளிட்ட 5 ரதங்களையும் பயணிகள் சுற்றிப்பார்த்து ரசிக்கும் வகையில் கிரானைட் கற்களை கொண்டு நடைபாதை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

இதற்கு முன்பு மணல் பரப்பில் சென்று சுற்றி பார்க்கும் நிலைமை இருந்தது. இதில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுற்றி பார்க்க சிரமப்பட்டு வந்தனர். இதனால் சுற்றுலா வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கிரானைட் கற்களால் அமைக்கப்படும் இந்த நடைபாதை வழியாக சென்று புராதன சின்னங்களை இனி சிரமமின்றி சுற்றி பார்க்கும் வகையில் தற்போது இந்த மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் மேற்பார்வையில் இந்த மேம்பாட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. புதுப்பொலிவோடு காட்சி தரும் ஐந்துரதம் பாரம்பரிய சின்னத்தை கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் தற்போது இந்த மேம்பாட்டு பணிகள் புதுடெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறை உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story