கும்பகோணத்தில் கள்ளக்காதல் ஜோடி, லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
கும்பகோணத்தில், லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில், லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கள்ளக்காதல் ஜோடி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லுார்-உச்சிதமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் செல்வம்(வயது 23). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தஞ்சை மாவட்டம் வீரமாங்குடியை சேர்ந்தவர் ஜெயா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் ஜெயா, செல்வம் கொத்தனார் வேலைபார்க்கும் இடத்தில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
கள்ளக்காதலர்கள் இருவரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அடிக்கடி தங்கி தனிமையில் சந்தித்து உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்தனர். ஆனால் இதற்கு இருவரின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் இவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த லாட்ஜ் ஊழியர்களிடம், கள்ளக்காதலர்கள் இருவரும் தங்களை காப்பாற்றுமாறு கூறி கதறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அவர்களிடம் என்ன நடந்தது? என விசாரித்து உள்ளனர். அப்போது அவர்கள், நாங்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தோம். எங்களது உயிரை காப்பாற்றுங்கள் என இருவரும் கதறி அழுதுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்ததும், அதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் மனம் உடைந்த இவர்கள், லாட்ஜில் அறை எடுத்து தங்கி அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.
கும்பகோணத்தில், லாட்ஜில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story