மாநில அரசின் பரிந்துரை இன்றி மின்துறையை தனியார்மயமாக்க முடியாது ; முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


மாநில அரசின் பரிந்துரை இன்றி மின்துறையை தனியார்மயமாக்க முடியாது ; முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2020 12:41 AM GMT (Updated: 5 Jun 2020 12:41 AM GMT)

மாநில அரசின் பரிந்துரை இன்றி மின்துறையை தனியார்மயமாக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை கேட்காமல் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுப்பட்டியலில் மின்துறை மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. சட்டமன்றம் உள்ள புதுச்சேரியில் இதுபோன்ற மத்திய அரசின் இந்த முடிவு பொருந்தாது.

அதாவது மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை கேட்காமல் மத்திய அரசு முடிவு எடுக்க கூடாது என்று மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு முன் பிரதமர், நிதி மந்திரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதங்களுக்கு இதுவரை பதில் இல்லை.

மின்சாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் மாநில அரசின் பரிந்துரை இன்றி எந்த முடிவும் எடுக்க முடியாது. தனியார்மய முடிவினை எதிர்த்து போராடும் புதுவை மின் துறை ஊழியர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மத்திய அரசின் மக்கள் விரோத திட்டத்தை தடுத்து நிறுத்த அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மின்துறை ஊழியர்கள் மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும். காய்கறி கடைகள்

புதுவை புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்ட காய்கறி கடைகள் தற்போது மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.

எனவே காய்கறி வியாபாரிகளை அழைத்து நாங்கள் பேசி உள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுதியாக கூறியுள்ளோம். அவ்வாறு செய்யாவிட்டால் காய்கறி கடைகள் ரோடியர் மில் திடலுக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இங்கு பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்.

எனவே தொழிற்சாலைகளில் பணிபுரிய தேவையான ஆட்கள் இல்லை என்ற குறை உள்ளது. இதை தவிர்க்க புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்குமாறு தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் வந்து பணிபுரியவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அங்கு பிற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க ஆலோசிக்க உள்ளோம். புதுவை சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.

ஆனால் நமக்கு மத்திய அரசின் உதவி முறையாக கிடைக்கவில்லை. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான தொகை, மத்திய அரசின் நிதி பங்களிப்பு போன்றவை சரிவர கிடைக்கப்பெறவில்லை. எல்லா மாநிலங்களிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story