மேலும் 12 பேருக்கு கொரோனா: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்’


மேலும் 12 பேருக்கு கொரோனா: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 5 Jun 2020 6:47 AM IST (Updated: 5 Jun 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர்.

55 பேர் ‘டிஸ்சார்ஜ்‘

நெல்லை மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த போதிலும், அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 8 பேர், புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 47 பேர் என மொத்தம் 55 பேர் குணமடைந்து நேற்று ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்‘ ஆனார்கள். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 2 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், ஒருவர் வெளியூரில் இருந்து வந்தவர் ஆவார்.

381 ஆக அதிகரிப்பு

ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 378 ஆக இருந்தது. தற்போது பாதிக்கப்பட்ட 3 பேரையும் சேர்த்து 381 ஆக அதிகரித்து உள்ளது. இதில் உள்மாவட்டத்தை சேர்ந்த 115 பேரும், வெளியூரில் இருந்து வந்தவர்கள் 266 பேரும் அடங்குவர். இவர்களில் இதுவரை 294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 86 பேர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு முதியவர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையிலும் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று செய்துங்கநல்லூரைச் சேர்ந்த 3 பேரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரும், ஆத்திக்குளத்தை சேர்ந்த 2 பேரும், உமரிக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரும் ஆக மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதிக அளவில் தொற்று உள்ள இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்து உள்ளது. 2 பேர் இறந்து உள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இதில் 77 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி விட்ட நிலையில், 19 பேர் மட்டும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story