நெல்லை பொருட்காட்சி திடலில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


நெல்லை பொருட்காட்சி திடலில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 5 Jun 2020 7:18 AM IST (Updated: 5 Jun 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பொருட்காட்சி திடலில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை பொருட்காட்சி திடலில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வியாபாரிகள் போராட்டம்

நெல்லை டவுன் போஸ் மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்து வந்தனர். அங்குள்ள கடைகளை இடித்து விட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தில் புதிய கடைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அந்த மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக, வியாபாரிகளுக்கு பொருட்காட்சி திடலில் தற்காலிக மார்க்கெட் அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஷெட் மூலம் அமைக்கப்பட்ட 86 கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, கொரோனா பிரச்சினை முடியும் வரை அங்கேயே கடைகளை நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து, கடைகளை காலி செய்ய உத்தரவிட்டது. இதற்கு எதிராக போராட்டம் நடத்திய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்த நிலையில் நேற்றும் அங்குள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கண்ணன் முன்னிலையில் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதில், டவுன் ஆர்ச் அருகே இணைப்பு சாலை, பள்ளிக்கூட வளாக பகுதி, கண்டியப்பேரி ஆகிய 3 இடங்களில் 220 கடைகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அங்கு வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படும் என்று ஆணையாளர் கண்ணன் உறுதி அளித்தார். இதையடுத்து வியாபாரிகள் சார்பில் 3 பகுதிகளில் யார்? யார்? கடைகள் அமைப்பது என்பது தொடர்பாக வியாபாரிகளுக்குள் பேசி பட்டியல் தயாரித்து மாநகராட்சி வசம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story