சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ் இல்லாமல் சென்று வர அனுமதி உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ் இல்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரிடம் உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மதுரை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை 8 மண்டலங்களாக அறிவித்து கடந்த 1-ந் தேதி முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளர்கள். இதனால் சில மாவட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை ஒட்டியுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து அதிக தொழிலாளர்கள் செல்கிறார்கள். அதுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு மதுரை, கரூர், திருப்பூர் மாவட்டங்களிலிருந்து வேலைக்கு செல்கிறார்கள். அதுபோல தொழிலாளர்கள் பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செல்கிறது. இந்த உணவுப்பொருட்களை சப்ளை செய்தவர்கள், சப்ளை செய்த பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்வதற்கு நேரடியாக செல்வது தான் வாடிக்கையாக உள்ளது. ஒரே நாளில் பல ஊர்களுக்கு சென்று வருவார்கள்.
ஒரே மண்டலமாக...
இதனால் பல மாவட்டங்களுக்கு இ-பாஸ் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் 50 நாட்களுக்கு பிறகு இப்போது தான் தொழில், வணிகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மூலம் தான் அரசிற்கு முழுமையாக வருவாய் கிடைக்கிறது. ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்லும்போது இடையூறு இருப்பதால் வணிகம் பாதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக அரசு கருதும் மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளை ஒரே மண்டலமாக அறிவித்து இ-பாஸ் இல்லாமல் சென்று வர அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story