பென்னாகரம் பேரூராட்சி : துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


பென்னாகரம் பேரூராட்சி : துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2020 2:13 AM GMT (Updated: 5 Jun 2020 2:13 AM GMT)

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவுப்படி ஒருநாளில் தலா ரூ.320 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று சமூக இடைவெளியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை செயலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலாவதி, மாநிலக்குழு உறுப்பினர் அங்கம்மாள், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் முருகேசன், வெள்ளியங்கிரி, வெங்கடாசலம், மோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பென்னாகரம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மற்ற பேரூராட்சிகளில் வழங்குவதை போன்று ஒருநாளுக்கு தலா ரூ.320 ஊதியத்தை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசும் போக்கை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சேதுலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, கலெக்டர் உத்தரவுப்படி ஊதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று செயல் அலுவலர் லதா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story