மாநகராட்சி பள்ளியில் பயிலும் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி பயிற்சி வகுப்பு கலெக்டர் தொடங்கி வைத்தார்
மாநகராட்சி பள்ளியில் பயிலும் 8,9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி பயிற்சி வகுப்பினை கலெக்டர் வினய் தொடங்கி வைத்தார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகள் ஊரடங்கினை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக தனியார் பள்ளிக்கு இணையாக ஆன்லைன் மூலமாக பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நீட் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் காலை மற்றும் மாலையில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளில் 8 மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி தளிர்திறன் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வகுப்பினை மாநகராட்சி அண்ணா மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் கலெக்டர் வினய் தொடங்கி வைத்தார்.
தனித்திறன் பயிற்சி
இந்த பயிற்சி வகுப்பு வருகிற 16-ந் தேதி வரை தினந்தோறும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தளிர் திறன் பயிற்சியில் ஒவ்வொரு நாளும் எதிர்கால திட்டமிடல், தனித்திறன் மேம்பாடு, மதுரை அறிந்ததும் அறியாததும், காகித கைவினைக்கலை, பதட்டமில்லா கல்வி, சுய முன்னேற்றம் தனித்திறன் பயிற்சி, கதை அறிதல், ஆங்கில வாசிப்பு மற்றும் பேச்சு பயிற்சி, கிச்சன் கார்டன், வார்த்தை விளையாட்டு என பல்வேறு தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியினை பேராசிரியர்கள் அளிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர்(பணி) பிரேம்குமார், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், கணினி திட்ட தொகுப்பாளர் ரவி மற்றும் தலைமை ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story