திருமங்கலம் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் ஒருதலைக்காதலால் விபரீத முடிவு
திருமங்கலம் அருகே ஒருதலையாக, தான் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக வாலிபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் பிரசாந்த் (வயது 22). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பெண்ணை கடந்த 3 வருடமாக ஒரு தலையாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு சென்ற வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதை அறிந்த பிரசாந்த் நேற்று காலை 11 மணியளவில் திருமங்கலம் கணபதி நகர் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறினார். செல்போன் டவர் தொழில்நுட்ப பணியாளர்கள் மேலே ஏறுவதாக அருகில் இருந்தவர்கள் நினைத்தனர்.
மிரட்டல்
செல்போன் டவரின் மேலே ஏறிய வாலிபர் அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாகவும், தான் காதலித்த பெண் ஏமாற்றியதாகவும், அந்தப்பெண்னுடன் சேர்த்து வைத்தால் தான் இறங்குவேன் என்றும் கூறி மிரட்டல் விடுத்தார். அதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் அந்த வாலிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கிவரும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால், கீழே இறங்கி வர அவர் மறுத்து விட்டார். சுமார் 4 மணி நேரமாக செல்போன் டவர் மீது ஏறி நின்று கொண்டு மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
தண்ணீருக்காக கீழே இறங்கினார்
இதற்கிடையே, வெயிலின் கொடுமை தாங்காமல் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறினார். அவருக்கு தண்ணீர் பாட்டிலை கீழே இருந்து அதிகாரிகள் டவரின் மேல்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அதற்கேற்ப பிரசாந்தும், டவரில் சிறிது தூரம் கீழே இறங்கி வந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கொண்டு மீண்டும் டவரின் உச்சிக்கு சென்று விட்டார்.
இது ஒருபுறமிருக்க, அவரை டவரில் இருந்து கீழே இறக்குவதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் செல்போன் டவர் மீது ஏறினர். இதையறிந்ததும், தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பெட்ரோலை அவர்கள் மீது திடீரென்று ஊற்றினார். இதனால், தீயணைப்பு வீரர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.
தன்னை மீட்க யாராவது டவரின் மேலே வந்தால், உடனடியாக கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். அதனை தொடர்ந்து அவனது தம்பி முத்துப்பாண்டியை அழைத்து அவனிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், எந்த பேச்சுவார்த்தையையும் ஏற்காமல் தொடர்ந்து செல்போன் டவரின் மீது அமர்ந்தபடி, மிரட்டல் விடுத்து வந்தார். சுமார் 8 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலைக்காதலுக்கே உயிரை விடுவதாக மிரட்டினால், இருவரும் சேர்ந்து காதலித்து இருந்தால், இந்நேரம் உயிரையே மாய்த்திருப்பான் என்று அதிகாரிகள் தலையில் அடித்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story