ஊரடங்கினால் தனியார் யானைகளுக்கு உணவு கிடைக்கவில்லையா? “தற்போதைய சூழ்நிலையில் விலங்குகளை பாதுகாப்பது அவசியம்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
“ஊரடங்கினால் தனியார் வளர்க்கும் யானைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்பது தொடர்பான வழக்கில் தற்போதைய சூழ்நிலையில் விலங்குகளை பாதுகாப்பது அவசியம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கொரோனோ நோய் தொற்று பரவும் தற்போதைய நிலையில் மனிதர்களை போல விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதே போல தனியாரிடம் உள்ள வளர்ப்பு யானைகளையும் பராமரிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தினந்தோறும் சராசரியாக ஒரு யானைக்கு 100 முதல் 150 கிலோ உணவு வழங்கப்பட வேண்டும். மேலும் வாழை இலை, ராகி, அரிசி, காய்கறி, நல்லெண்ணெயும், தினமும் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் கொடுக்க வேண்டும். அவ்வப்போது இந்த யானைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம். இதுபோன்ற வனவிலங்குகளை பராமரிப்பதற்காக 5 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக அரசும் வனவிலங்குகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவில் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளை போல, தனியார் வளர்க்கும் யானைகளுக்கும் உரிய உதவிகளை அரசு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் கருத்து
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ஊரடங்கினால் தனியார் வளர்க்கும் யானைக்கு உணவு வழங்க முடியவில்லை என சம்பந்தப்பட்ட நபர் முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளார். இதேபோல தனியாரிடம் உள்ள பல யானைகள் உணவுக்கு அவதிப்படும் நிலையும் உள்ளது” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முகநூலில் பதிவு வெளியிட்ட நபரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்திருக்கலாமே? என கேள்வி எழுப்பினர். தற்போதைய சூழ்நிலையில் மனிதர்களை போல விலங்குகளையும் பாதுகாப்பது அவசியம் என்பதில் மாற்று கருத்து கிடையாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
குழு அமைப்பு
பின்னர் இதுதொடர்பாக வன அதிகாரிகளை தொலைபேசி மூலம் நீதிபதிகள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், தனியாரிடம் உள்ள யானைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.
இதையடுத்து, யானைகளை வளர்க்கும் எந்த தனியார் அமைப்பினர், யானைகளுக்கு உணவு வழங்கவில்லை என்பதை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உரிய நிவாரணம் பெறலாம் எனக்கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story