காரியாபட்டி அருகே வாலிபர் அடித்துக்கொலை


காரியாபட்டி அருகே வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2020 9:19 AM IST (Updated: 5 Jun 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே முன்விரோதத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 35). இவரும், உறவினர்களும் அந்த கிராமத்தில் கோவில் கட்டி வந்தனர். இந்த கோவிலுக்கு எதிரே அதே ஊரை சேர்ந்த ஆதிமூலம் மகன் தவமுருகனின் இடம் உள்ளது.

கோவில் கட்டி வரும் திருமுருகன் தரப்பினரும், தவமுருகன் தரப்பிற்கும் ஏற்கனவே இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த கருப்பாயி என்பவர் அவரது வயல்வெளியில் குப்பைகளுக்கு தீ வைத்தார். அந்த தீ தவமுருகன் வைக்கோல் படப்பில் பற்றி முழுவதும் எரிந்துவிட்டது. இதையறிந்த தவமுருகன், கருப்பாயிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக நீ சொல்லித்தான் கருப்பாயி தீவைத்து விட்டார் என்று திருமுருகனை தவமுருகன் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அடித்துக்கொலை

மேலும் தவமுருகன், அவரது மனைவி மஞ்சுளா, மகள் மகாலட்சுமி ஆகியோர் திருமுருகனை கம்பால் தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திருமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக் கோரி திருமுருகன் பிணத்துடன் அவரது உறவினர்கள் நரிக்குடி முக்குரோட்டில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதர் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் போலீசார் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story