சேலத்தில் பெண் டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா


தேவூரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
x
தேவூரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 5 Jun 2020 9:44 AM IST (Updated: 5 Jun 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெண் டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதையொட்டி வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களை மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாக்டர் உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் தேவூர் பகுதிக்கு வந்த பெண் பல் டாக்டர் மற்றும் சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் லாரி டிரைவர் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும், பல் டாக்டர் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் ஒரு தம்பதி மருத்துவ கல்லூரியில் படித்து வரும் தனது மகள் மற்றும் மகனுடன் வந்தனர். அவர்களுக்கு மாவட்ட எல்லையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் மருத்துவ கல்லூரி மாணவி மற்றும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சென்னையில் சேர்க்கப்பட்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை கே.கே. நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தேவூரை சேர்ந்த பெண் பல் டாக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரது வீட்டில் உள்ள தந்தை, தாய் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவரது வீடு உள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தேவூர், மேட்டுக்கடை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் தேவூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story