சிறுமி நரபலி சம்பவத்தில் சிக்கிய பெண் மந்திரவாதியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை


சிறுமி நரபலி சம்பவத்தில் சிக்கிய பெண் மந்திரவாதியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை
x

சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் சிக்கிய பெண் மந்திரவாதியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் சிக்கிய பெண் மந்திரவாதியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மந்திரவாதியிடம் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீரின் மகள் வித்யா(வயது 13). இவள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் அவளது தந்தை பன்னீர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகாயி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் மந்திரவாதி வசந்தியை தனிப்படை போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாந்திரீக பூஜைகள்

மேலும் மந்திரவாதி வசந்தி, புதுக்கோட்டை மட்டுமின்றி சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு விதமான மாந்திரீக பூஜைகளை செய்துள்ளார். தனிப்படை போலீசார் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட சிலரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை நரபலி கொடுப்பதற்கு முன்பு நடந்த பூஜையில் வசந்தி கலந்து கொண்டு பலவித பூஜைகள் செய்துள்ளார்.

மேலும் வசந்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாந்திரீகத்தில் ஈடுபட்டு வருவதால், வேறு பகுதியில் பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி மயக்கி, யாரையாவது நரபலி கொடுக்க தூண்டியுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுமியை கொன்றது எப்படி? பன்னீரின் இரண்டாவது மனைவி சாவுக்கும், வசந்திக்கும் சம்பந்தம் உண்டா? பன்னீருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story