விழுப்புரம் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jun 2020 10:34 AM IST (Updated: 5 Jun 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 348 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 321 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 25 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகள் வந்தது. இதில் மேலும் 8 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரும், மேல்மலையனூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியும், 48 வயதுடைய பெண்ணும், 18 வயதுடைய இளைஞரும், மரக்காணம் அருகே கரிப்பாளையத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், விழுப்புரம் அருகே தோகைப்பாடியை சேர்ந்த 52 வயதுடைய ஒரு பெண்ணும், மேல்மலையனூரை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண்ணும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 8 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, இவர்கள் வசித்து வரும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த 627 பேர் 11 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 459 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story