விழுப்புரத்தில் அம்மா குடிநீர் விற்பனை மீண்டும் தொடங்கியது


விழுப்புரத்தில் அம்மா குடிநீர் விற்பனை மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 5 Jun 2020 10:49 AM IST (Updated: 5 Jun 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கொரோனாவால் முடங்கிய அம்மா குடிநீர் விற்பனை மீண்டும் தொடங்கியது.

விழுப்புரம்,

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் அம்மா குடிநீர் திட்டம், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்கள் 1 லிட்டர் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதால் மலிவு விலையில் கிடைக்கும் அம்மா குடிநீர் பாட்டில்களையே அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களிடையே அம்மா குடிநீர் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அம்மா குடிநீர் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் பஸ் நிலையங்களில் செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் மூடிக்கிடந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது 5-ம் கட்ட ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்துள்ள போதிலும் படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த தளர்வுகளின்படி கடந்த 1-ந் தேதி முதல் 50 சதவீதம் பஸ் போக்குவரத்து தொடங் கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களும் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதையடுத்து தற்போது அரசு விதிகளின்படி குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் கும்மிடிப்பூண்டியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு நேற்று முதல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து 2½ மாதங்களுக்கு பிறகு அங்குள்ள மையங்கள் திறக்கப்பட்டு மீண்டும் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்நேரத்தில் அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story