கடலூரில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்வு: கொரோனாவுக்கு முதியவர் பலி


கடலூரில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்வு: கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 5 Jun 2020 5:39 AM GMT (Updated: 5 Jun 2020 5:39 AM GMT)

கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பலியானார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசுடன் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் 462 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 435 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த, கடலூர் செம்மண்டலம் தண்டபாணி நகரை சேர்ந்த 35 வயதுடைய பெண் கடந்த 28-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அந்த பெண்ணின் குடும்பத்தினரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரியை எடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இதில் அந்த பெண்ணின் கணவர், 13 வயது மகன், 11 வயது மகள், 87 வயதுடைய மாமனார், மாமியார் ஆகிய 5 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தனி வார்டில் 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 87 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் வரவில்லை என தெரிகிறது. மேலும் அவருடைய மனைவி, மகன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் இறந்த முதியவரின் உடலை அதிகாரிகளே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அவர்களது குடும்பத்தினரும் ஒத்துழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த முதியவரின் உடல், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்புடன் புவனகிரி அருகே ஆதிவராகநல்லூரில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய பெண். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இதையடுத்து அந்த பெண் டாக்டர் மற்றும் அவரது கணவரிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் அந்த பெண் டாக்டர் மற்றும் அவரது கணவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னையில் இருந்து கடலூர் ஆயிபுரம் பகுதிக்கு வந்த 29 வயது வாலிபருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நல்லூர் பகுதிக்கு வந்த 45 வயதுடைய 2 பேருக்கும், 32 வயது வாலிபர் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த 32 வயதான கர்ப்பிணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.


Next Story